தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 25, 2019, 8:27 PM IST

ETV Bharat / state

இலவச வேட்டி சேலை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு!

சென்னை: இலவச வேட்டி, சேலை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு, ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது.

இதில், ஒரு சேலை தயாரிப்பிற்கு 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், 21 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், ’ஒரு நாளைக்கு ஆறு சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை நெய்வதற்கு வழங்கியதால் ஒரு நாளில் மூன்று சேலைகளை மட்டுமே நெய்ய முடிகிறது. இதனால், தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

தரம் குறைந்த நூல்களை, அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு 21.31 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க:பயிர் காப்பீடு வழங்குவதில் ரூ.40 லட்சம் முறைகேடு - திருவாரூர் விவசாயிகள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details