தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், ஜூன் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகிய பணியிடங்களில் 2,098 இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த தேர்வினை எழுத மார்ச் 1ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான எழுத்துத்தேர்வு ஜூன் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முறையில் நடைபெறும்.
ஏற்கெனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 235 பணியிடங்களும் பாட வாரியாக நிரப்பப்படும். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல், அரசியல், அறிவியல், மனை அறிவியல், இந்திய கலாசாரம், உயிர்வேதியியல், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கம்பியூட்டர் முதுகலை ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பாடப்பிரிவுகளில் இட ஒதுக்கீடு வாரியாக எத்தனைப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் நியமனத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை அரசு விதிகளின்படி பின்பற்றப்படும்.
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்:
ஆசிரியர் பணிக்கு கடந்த தேர்வு வரை, 58 வயது வரை விண்ணப்பிக்க முடியும். ஆனால், மத்திய அரசின் சட்ட விதிகளின்படி நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனடிப்படையில் முதல்முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 2021ஆம் தேதி 40 வயதினைக் கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டு 45 வயது வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவித்துள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ள தகுதிகள்:
முதுகலை பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்னர் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளுடன் ஒரு பட்டப் படிப்பினை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு அனுமதித்த கல்லூரியில் முடித்திருக்க வேண்டும்.
இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கட்டாயம் முடித்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.