சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் மண்டல செயற்பொறியாளர் தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு உதவி இளநிலை பொறியாளர், ஒரு மின் துறை உதவிப்பொறியாளர், 10 சாலைப் பணியாளர்கள் மற்றும் 5 மலேரியப் பணியாளர்கள் என மொத்தம் 18 நபர்கள் உள்ளனர்.
மேலும் கட்டடக்கழிவுகளை அகற்ற 1 பாப்காட் இயந்திரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற 1 ஜேசிபி இயந்திரம் மற்றும் இவற்றைக் கொண்டு செல்ல 1 லாரி மற்றும் மினி வேன் மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் மழைநீர் வடிகால் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.