சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்மருத்துவக்கல்லூரியில் 2 இடங்களுக்கும், அரசு ஒதுக்கீட்டில் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 128 இடங்களிலும், நிர்வாக ஒதுக்கீட்டில் 76 இடங்கள் என 206 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு அக்டோபர் 18, 19 ஆகிய 2 நாட்களில் https://tnmedicalselection.net, https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் இன்று (அக்.17) அறிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ் படிப்பில் 17 காலியிடங்கள்:2023-24ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி, தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 105-ல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 14, 600 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 8,316 இடங்களும், நிர்வாக ஒதுககீட்டில் 2,032 இடங்களும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டது. எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4 சுற்றுக் கலந்தாய்வு முடிந்தப்பின்னர் அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 13 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 4 இடங்களும் என 17 இடங்கள் காலியாக உள்ளது.
பிடிஎஸ் படிப்பில் 51 காலியிடங்கள்:அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் உள்ள 12 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் 4,172 இடங்கள் நிரப்புவதற்கு தேசிய மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவிற்கு அனுமதிக்கப்பட்டன. அதில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4 சுற்றுக் கலந்தாய்வும் முடிவுற்ற நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக்கல்லூகளில் 24 இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 51 இடங்களும் காலியாக உள்ளது.
மத்திய அரசின் அனுமதி அவசியம்:இந்த நிலையில் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான 4 சுற்றுக் கலந்தாய்வு முடிந்து, அவர்கள் சேர்வதற்கான காலக்கெடு அக்டோபர் 3ஆம் தேதி என மத்திய மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே, அவர்கள் அனுமதி தரும் வரையில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களை சேர்க்க முடியாது.