சென்னை:இந்தியாவின் 2022ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
பட்ஜெட் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை - தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், '2022-2023ஆம் ஆண்டு பட்ஜெட் நனைந்துபோன பட்டாசு போல உள்ளது. நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக எந்தத் திட்டமும் இல்லை' எனக் கூறினார்.
2022 -2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நனைந்து போன பட்டாசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு மேலும் பிரதமர் மோடி இந்த நிதிநிலையை 100 ஆண்டுகளுக்கானது என்று கூறும் வகையில் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.
’48,000 கோடி ரூபாயில் 18 லட்சம் வீடுகள் கட்டப் போவதாகத் தெரிவித்துள்ளனர் இதன் அடிப்படையில் பார்த்தால் இரண்டு லட்சம் ரூபாயில் எப்படி ஒரு வீடு கட்ட முடியும்’ எனவும் பாலகிருஷ்ணன் லாஜிக்காக கேள்வி எழுப்பினார்.
சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு மானியம் அல்லது தொழில் செய்வதற்கு ஏதாவது வசதி செய்து தருவதற்குப் பதிலாகக் கடன் தருவதற்கு மட்டுமே தயாராக உள்ளது என்றும்; இது எப்படி நியாயமாக இருக்கும் என்றும்; அதுமட்டுமில்லாமல் எல்ஐசி பங்கு தனியாருக்கு விற்கப்படும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது என்றும் கூறி, கண்டனம் தெரிவித்துப் பேசினார்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கருத்து,
பட்ஜெட் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்,
"மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறு குறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது" எனப் பதிவு செய்து இருந்தார்.
இதையும் படிங்க:Budget 2022: பாதுகாப்புத்துறையில் தற்சார்பு, தனியார் முதலீட்டுக்கு முக்கியத்துவம்