காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கியது. இதில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆற்ற வேண்டிய பணி குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, "தமிழ்நாடு அரசியல் சூழலை தெரிந்துகொள்ள தினேஷ் குண்டுராவ் வந்துள்ளார். அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பு ஏற்றவுடன் மக்களவைத் தேர்தலில் வெற்றிகளைப் பெற்றுள்ளோம். காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் நாட்டை காப்பாற்ற முடியும். நீண்ட காலத்திட்டம், குறைந்த காலத் திட்டம் ஆகியவற்றை கே.எஸ். அழகிரி திட்டமிட வேண்டும்.
அவர் தலைமையில் நாம் பயணிக்க வேண்டும். கூட்டணியில் உரிய பங்கீடு கிடைக்க அனைத்து மாவட்டத் தலைவர்களும் தங்களது பலத்தை சிறப்பாக காட்டவேண்டும். தற்போது நமக்கு கொடுக்கப்படும் இடங்கள் குறைந்துள்ளன. அதனை அதிகப்படுத்த பாடு படவேண்டும். வாக்குச்சாவடி ஆளவிலான பணிகளை நாம் தொடங்கத் தயாராக வேண்டும்" என்றார்.
"தொகுதிகள் எண்ணிங்கை, இடங்கள் குறித்தெல்லாம் நாம் இப்போது பேசவேண்டியதில்லை. பேசவும் கூடாது. நமது கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும். தேர்தல் நேரத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய நிலையுள்ளது. முன்பெல்லாம் அடிக்கடி மாநிலத் தலைவர்கள் மாறுவார்கள். தற்போது மாவட்டத் தலைவர்கள் மாறுவது அதிகரித்துள்ளது.
இந்தநிலை மாறவேண்டும். மாவட்ட நிர்வாகிகள் அடிக்கடி மாற்றப்படுவதால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படலாம். எனக்கும் அழகிரிக்கும் சண்டை இல்லை..சிறிய குழப்பங்கள் உள்ளது. அது சரியாகிவிடும்" என திருநாவுக்கரசர் முடிக்க ஜாலியாக பேசத்தொடங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
" நாங்க எப்போவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில தலையிடமாட்டோம். நீங்க பெரிய மீன்கள். நாங்க சின்ன மீன்கள். பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் என் மீது மிகுந்த பாசம் உள்ளது. அதனால்தான் எப்போது என் ஆட்சி கவிழும் என பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி கரோனா ஒன்று புதுச்சேரியில் உள்ளது. அதனைச் சமாளிப்பதே ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. எங்களுக்கு எதிர்கட்சிகளே இல்லை. ஆனால், நரேந்திர மோடி எங்களுக்கு எதிராக அனைத்துப் பிரச்னைகளையும் கொடுக்கிறார்" என்று கிரண்பேடியை சாடி பேசிமுடித்தார்.