தமிழ்நாட்டுக்காரர்கள் குசும்புக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நூற்றாண்டை இணையதளம் ஆதிக்கம் செலுத்தும் காலமாக மாறிவிட்டது. ஒரு செய்தி காட்டுத்தீபோல் வைரலாக வேண்டும் அதுவும் மக்கள் மத்தியில் விஷ்வரூபம் எடுத்து விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முக்கியமாக ஒரு காணொலி, புகைப்படம், முக்கியத் தகவல்கள் எதுவாக இருந்தாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் டிரெண்டாக்குவது வழக்கமாகிவிட்டது. சமூக வலைதளத்தில் எது ஹிட் அடிக்கும் என்பது புரியாத புதிர்தான். ட்விட்டர் பக்கத்தில் போகிறபோக்கில் கமெண்ட் செய்துவிட்டு போனை ஆஃப் செய்த அடுத்த நிமிடம் நினைத்துப் பார்க்கமுடியாத வகையில் கமெண்ட்டுகள் குவியும். அதுபோலத்தான் நேசமணி டிரெண்டிங் ஸ்டார் ஆனார்.
கான்ட்ராக்டர் நேசமணிக்கு என்னதான் ஆச்சு?
ஃபேஸ்புக்கில் சிவில் இன்ஜினியரிங் லேர்னர்ஸ் (Civil Engineering learners) என்ற பக்கத்தில் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு 'இதை உங்கள் ஊரில் எப்படி அழைப்பீர்கள்?' என்று கேட்டுள்ளனர். இதற்கு விக்னேஷ் பிரபாகர் என்ற இளைஞர், "இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலைபார்க்கும்போது பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை அவரது அண்ணன் மகன் சுத்தியல் போட்டு உடைத்துவிட்டார் பாவம்" என ப்ரண்ட்ஸ் பட காமெடியை நினைத்து பதிவிட்டுள்ளார்.
மோடியை மிஞ்சிய நேசமணி
இதற்குப் பிறகு பதிலளித்தவர்கள் #prayfornesamani என்று பதிவிட்டனர். இந்த ஹேஸ்டேக் காட்டுத்தீ போல் பரவியதுதான் தாமதம் தமிழ்நாட்டு ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறினார் கான்ட்ராக்டர் நேசமணி. இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளிவந்த ப்ரண்ட்ஸ் திரைப்படம் பத்து வருடங்களுக்கு பிறகு ஹேஷ்டேக் மூலம் கான்ட்ராக்டர் நேசமணியாக பிரபலமானது.
மீம்ஸ் கிரியேட்டர்களின் கிங் ஆக வலம்வரும் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணிக்கு என்ன ஆச்சு? என்று போன் அழைப்புகள் மூலம் கேட்கும் அளவிற்கு ட்ரெண்ட் ஆனார். மே 29ஆம் தேதி மோடி 2.0 பதவியேற்பை விட #prayfornesamani அதிகம் பேசப்பட்டார்.