சென்னை: வரும் 27ஆம் தேதி சென்னை பள்ளிக் கல்வித்துறை இயக்குநரக (DPI-Directorate of Public Instruction Campus) கட்டிட வளாகத்தில் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தெருவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளித்து இருந்தார். இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரிய இடமான DPI கட்டிட வளாகம், போராட்டம் நடத்த ஏற்ற இடம் அல்ல என அனுமதி கோரிய மனுதாரருக்கு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், "மனுதாரர் கபிலன் சின்னசாமி குறிப்பிட்ட DPI கட்டிட வளாகத்தில் கல்வி ஆணையாளர் அலுவலகம், தொடக்கக்கல்வித் துறை, அரசு தேர்வுகள் துறை, ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆசிரியர்கள் தேர்வு வளாகம், முறைசாரா வயது வந்தோர் கல்வி நிறுவனம், பெற்றோர் ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், மாதிரி பள்ளி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, உடற்கல்வி முதன்மை அலுவலகம், கல்வி தொலைக்காட்சி நிறுவனம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.