சென்னை:பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பன்சத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் அறநிலைத்துறை மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. பாப்பன்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால்சாமி கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை, குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்திருப்பதாகவும், இடத்தை காலி செய்யவும் கோரி, அறநிலையத்துறை சார்பில் சம்மன் அனுப்பபட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்தினர், மனுக்கள் தாக்கல் செய்தனர். இடத்தின் உரிமையாளராக கோவிலை கருத முடியாது, அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க உரிமை இல்லை என அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இடத்தின் உரிமை தொடர்பான பிரச்னை, நில நிர்வாக கமிஷனரிடம் நிலுவையில் உள்ளது. எனவே, அறநிலையத்துறை இணை ஆணையர் அனுப்பிய சம்மன் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அனாதினம் ஆக்கிரமிப்பு என 32.43 சென்ட் நிலத்தை வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் சைலேந்திரன், வட்டாட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் வருவாய்துறையினர் சோதனைக்கு சென்றனர். பின்பு காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் அங்குள்ள ஆக்கிரமிப்பில் இருந்த நாகத்தா ஏரி ஆக்கிரமிப்பை மீட்டு அங்கு கட்டப்பட்டு இருந்த ரோப்கார் இயக்கும் கட்டிடம், இமாலய ரைட், நீச்சல் குளம், பேப்பர் போர்ட், பேட்டரி ஸ்கூட்டர், ரயில் தண்டவாளம் என ஆகிரமிப்பில் இருந்த அனைத்திற்கும் சீல் வைத்தனர்.