சென்னை:கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு முன்னதாக உத்தரவிட்டது. அதன்படி, ஐந்து மாதங்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
மேலும், 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளி, கல்லூரிகள் இயங்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளே ரயிலில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஸ் டே கொண்டாட திட்டமிட்ட மாணவர்கள்?
மேலும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து தினத்தை கொண்டாடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இருப்பினும், நேற்று முன்தினம் (செப். 1) மூன்று குழுக்களாக தனித்தனியாக பேனர்களைப் பிடித்துக்கொண்டு முழுக்கம் எழுப்பியவாறு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கல்லூரியிலுள்ள பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த ஊர்வலத்தில், கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
ஊர்வலமாக வந்த கல்லூரி மாணவர்கள் 200பேர் மீது வழக்கு ஊரடங்கை மீறி ஊர்வலம்
இந்நிலையில், அரசு உத்தரவை மீறுதல், நோய் தொற்று பரவும் எனத் தெரிந்தே கூட்டம் கூடுதல், நோய் பரவ காரணமாக இருத்தல் ஆகிய காரணங்களால் மூன்று பிரிவுகளின் கீழ் 200 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து அந்த மாணவர்களைக் கண்டிக்க வேண்டும் எனவும் பச்சையப்பன் மாநில, நந்தனம் கல்லூரி பேராசிரியர்களிடம் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கரோனா விதிமுறைகளை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல்!