தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் ரயில் மூலம் பணம், மதுபாட்டில், பரிசுப்பொருள்கள் என போதிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரும் பொருள்களை கண்காணிக்க ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு போலீசார் அடங்கிய சிறப்பு தேர்தல் படை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிறப்பு தேர்தல் படையினர் நேற்று சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், இருவரும் திருநெல்வேலியை சேர்ந்த ஹைதர் (55), யூசுப்அலி (40) என்பதும், இரண்டு பைகளில் மொத்தம் ரூ. 20 லட்சம் பணத்தை விஜயவாடாவில் இருந்து எடுத்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் விஜயவாடாவில் இருந்து பிரபல பீடி நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், திருநெல்வேலியில் உள்ள கிளை அலுவலகத்திற்கு பணத்தை எடுத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சிறப்பு தேர்தல் படையினர் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்ட பின் இருவரையும் விடுவிப்பர் எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலக்கூறுக்கு நிலையான மாற்றைக் கண்டறிந்த சென்னை ஐஐடி