சென்னை:கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குறித்து ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட badzha thinks மற்றும் Rishipedia ஆகிய 2 யூடியூப் சேனல்கள் மீதும் அந்த யூடியூப் சேனலில் பேசிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி 50க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி உதவி ஆணையர் ஹரிகுமார் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதியாக 6 பேர் காவல் ஆணையரைச் சந்தித்து மனு அளிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அலுவலகம் வரை அழைத்து வரவேண்டாம் எனவும் தானே கீழே வந்து புகாரைப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்த சைபர் கிரைம் கூடுதல் துணை ஆணையர் சாஜிதா காவல் ஆணையர் அலுவலக வாயிலிலேயே சென்று மாற்றுத்திறனாளிகளின் புகாரை பெற்றுக் கொண்டார்.
மேலும், ஏற்கனவே தொலைப்பேசி மூலமாக தனக்கு இந்த புகார் வந்திருப்பதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகள் நேற்றே முதலே மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்ததையடுத்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட 2 யூடியூப் சேனல்கள்! அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் தலைவர் ராஜா கூறுகையில், "பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் மிகவும் கொச்சைப்படுத்தும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் தங்களின் அந்தரங்க விவகாரத்தைப் பொதுவெளியில் வெளியிட்ட இரண்டு யூடியூப் சேனல் மற்றும் அதை நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்துக் கலைந்து செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். இரு நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். பொதுவாகவே சாதி-மத உள்ளிட்ட பிரச்சனைகளில் கருத்து கூறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளை அவதூறு செய்யும் வகையில் பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் கூறினார்.
மேலும், நடிகர் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் கால் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் வசனம் வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது வரை அந்த வசனம் நீக்கப்பட வில்லை என்பதையும் சுட்டிக்காட்டிக் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?