சென்னை அரும்பாக்கம் ஆர்ச் அருகில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காவல் துறையின் வாகன சோதனையை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "இன்று(ஜூன் 19) முதல் நாள் மட்டும் ஊரடங்கை மீறியதாக 2 ஆயிரத்து 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஆயிரத்து 997 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ஆயிரத்து 883 இருசக்கர வாகனங்கள், 97 மூன்று சக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கியுள்ளன.
அதேபோன்று, அத்தியாவசியப் பொருள்களை வாகனங்களில் கொண்டு செல்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சென்ற 989 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை வாங்க போக வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரு வாரத்திற்குத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கினால் வெளியே சுற்றுவதைத் தவிர்க்கலாம்.
ஆய்வுப் பணி மேற்கொண்ட காவல் ஆணையர் ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது, அதை காக்கும் வகையில் அரசு எடுத்த இந்த நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அதிகளவில் ராயபுரம் உள்ளிட்ட வட சென்னைப் பகுதியில் தான் அதிக வழக்குகள் போடப்பட்டுள்ளன. இரண்டு சக்கர வாகனங்களில் இருவர், மூவர் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அத்தியாவசியத் தேவைக்காக மட்டும் சென்னையிலிருந்து வெளியே செல்பவர்கள் தகுந்த ஆவணங்களுடன் அனுமதிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் 2115 பேருக்கு தொற்று