சென்னை:கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் "சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்" என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர், தினேஷ்குமார். இவர் ஆன்லைனிலும் மற்றும் தினசரி நாளிதழ்களிலும் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கித் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார். இதைப் பார்த்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் சான்றிதழ்களுடன் தினேஷ்குமார் அலுவலகத்தில் வேலை கேட்டு குவிந்தனர்.
அப்போது அவர்களிடம் முன்பதிவு கட்டணமாக ரூ2ஆயிரம் வசூலித்ததாகத் தெரிகிறது. பின்னர் வேலை உறுதி ஆகிவிட்டது என ஆசை வார்த்தைக் கூறிய தினேஷ்குமார் ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார். ஆனால், சொன்னபடி யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்த தினேஷ்குமார் திடீரென அலுவலகத்தை மூடிவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.
இதனால் பணம் கட்டியவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். 56-க்கும் மேற்பட்டோர் இதுபற்றி கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ்குமார் கோடம்பாக்கம் பகுதியில் மட்டும் 3 இடங்களில் அலுவலகம் நடத்தி வேலை தேடி அலையும் பட்டதாரிகளை குறி வைத்து வேலை வாங்கித் தருவதாக நூதனமான முறையில் அவர்களை ஏமாற்றி ரூ.17 லட்சம் வரை சுருட்டி தப்பியது தெரிந்தது.