கோவை:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று தனியே சுற்றி வருகிறது. எவ்வித தயக்குமும் இன்றி சாலையை கடப்பது, மனித நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வருவது, வழியில் கிடைக்கும் வாழை போன்ற விவசாய பயிர்களை உண்பது, தோட்டங்களில் உள்ள தொட்டிகளில் நீர் அருந்துவது போன்றவை இந்த யானையின் தினசரி வாடிக்கையாகிவிட்டது.
வனத்துறையினர் இதனை காட்டை நோக்கி விரட்டினாலும் மீண்டும் மீண்டும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கே திரும்பி வந்தபடி உள்ளது. இதுவரை மனிதர்கள் யாரையும் இந்த யானை தாக்கியதில்லை என்றாலும் நீண்ட தந்தங்களுடன் குடிருப்பு வீடுகளின் வழியே கடந்து செல்வதும், சர்வ சாதாரணமாக சாலைகளில் சுற்றி திரிவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
பாகுபலி யானை
அதன் பெரிய உருவம் காரணமாக யானைக்கு பாகுபலி என்று அப்பகுதி மக்கள் பெயரிட்டுள்ளனர். இப்பகுதி மக்கள் இதனை அடர்ந்த காட்டினுள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
யானைகளின் இயல்பான பழக்க வழக்கங்களை மீறி மாதக்கணக்கில் ஒரே இடத்தில் முகாமிட்டு மனிதர்கள் வாழும் பகுதியில் தனியே சுற்றித்திரியும் பாகுபலி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அதன் கழுத்து பகுதியில் ரேடியோ காலர் பொருத்த தமிழ்நாடு தலைமை வன உயிரின காப்பாளர் கடந்த வாரம் உத்தரவிட்டார்.