சென்னை: வடசென்னை பகுதியில் அம்பேத்கர் கல்லூரி சந்திப்பில் காவல்துறையினர் இன்று (ஜூன் 4) வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆட்டோவில் அவ்வழியாக வந்த ஒரு நபரை விசாரணை செய்தபோது, அவரது உடல் அமைப்பு சந்தேகத்திற்கு இடமாக இருந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த அந்த பயணியை சோதனை செய்து பார்க்கும்போது அவரது உள்ளாடைகளில் ரகசியமாக தங்க நகைகளை மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் ராஜஸ்தானை சேர்ந்த ராஜு ராம் என்பதும், சௌகார்பேட்டையில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், சௌகார்பேட்டையில் உள்ள முகேஷ் அண்ட் பிரதர்ஸ் என்ற நகை கடைக்கு இந்த நகைகளை எடுத்துச் செல்வதாகவும் ராஜு ராம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆந்திரா நெல்லூரில் இருந்து பேருந்து மூலமாக மாதவாரத்திற்கு எடுத்து வந்ததாகவும், அதன் பின் ஆட்டோ மூலமாக நகைக்கடைக்கு எடுத்துச் செல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்தூருக்கு இட்லி கடைக்கு வேலைக்கு சென்ற தேனி சிறுவர்கள் மாயம்.. ராஜதானி போலீசார் மீட்டது எப்படி?
கடந்த சில மாதங்களாக வட சென்னை பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்படும் நகைகளை கொள்ளையடிக்கும் நிகழ்வு அதிகமாக நடந்துள்ளதால், உரிய ஆவணங்கள் இல்லாமல் தான் கொண்டு வரும் நகைகளையும் கொள்ளையடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளாடையில் ரகசியமாக கொண்டு வந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். கொண்டுவரப்பட்ட தங்க நகைகளை அளந்து பார்க்கும் பொழுது இரண்டு கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் போலீசார் பறிமுதல் செய்த தங்க நகைகளை வருமானவரித்துறை இடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: லிப்ட் கேட்ட பள்ளி சிறுவனிடம் பாஜக உறுப்பினர் பாலியல் சீண்டல் என புகார்.. சென்னையில் நடந்தது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக, எம்கேபி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆந்திராவில் இருந்து ஏற்கனவே தங்க நகைகள் கொண்டுவரப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இதேபோன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் எத்தனை முறை தங்க நகைகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பயிற்சி கூடமான பூர்வீக வீடு.. மதுரையில் ஓர் 'மாணிக்கம்' - இப்படியும் ஓர் ஐஏஎஸ் அதிகாரியா..? - நெகிழ்ச்சி சம்பவத்தின் சிறப்பு தொகுப்பு!