சென்னை:கர்நாடக அரசு தமிழகத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு, 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது.
காவிரி மேலாண்மை ஆனையத்தின் உத்தரவில் தலையிட விருப்பமில்லை எனக் கூறி, கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று (செப்.26) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இன்று சென்னை - பெங்களூரு இடையேயான இரண்டு விமான சேவைகள் போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, காலை 9.30 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் காலை 11.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பகல் 12.15 மணிக்கு பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய இரு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், இந்த இரு விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளின் டிக்கெட்டுகள், வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த இரண்டு விமான சேவைகள் போதிய பயணிகள் இல்லாமல் இன்று ரத்து செய்யப்பட்டாலும், சென்னை - பெங்களூரு இடையே இன்று இயக்கப்படும் 9 விமானங்கள் மற்றும் பெங்களூரு சென்னை இடையே இயக்கப்படும் 9 விமானங்கள் என சென்னை- பெங்களூரு - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் 18 விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
இருந்த போதிலும் அந்த விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.
இதையும் படிங்க: தேனியில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலுவின் உடல் உறுப்புகள் தானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி!