சென்னை: சாா்ஜாவிலிருந்து இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்த சிறப்பு ஏா் அரேபியா விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வு துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு அவசரமாகத் தகவல் கொடுத்தனா்.
உடனடியாக விமான நிலைய சுங்கத்துறையினா் ஏா் அரேபியா விமானத்தில் வந்த 92 பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டனா். அப்போது, கா்நாடகா மாநிலம், மங்களூரைச் சோ்ந்த பயணி முகமது அராபத்(24) என்பவா் கொண்டுவந்திருந்த எமா்ஜென்சி விளக்கு மீது அலுவலர்களுக்குச் சந்தேகம் ஏற்படத் தீவிரமாக அதனை சோதனையிட்டனர். அதில், 18 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனா்.