சென்னை:தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை விடுமுறை எனவும், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி முதலும், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கு பின்னர் விடுமுறை அறிவிப்பதில் பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. பள்ளிக்கல்வித்துறையின் ஆண்டு கால அட்டவணைப்படி அக்டோபர் 6ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்க உள்ளதாக அறிவித்திருந்தது. இந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு விடுமுறை என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காலாண்டு தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. செப்டம்பர் 30ஆம் தேதி அன்று காலாண்டு தேர்வு முடிந்தவுடன் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை முதல் பருவ விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால் அதற்கு பதிலாக ஈடு செய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் அக்டோபர் 6 ,7, 8 ஆகிய மூன்று நாட்களும் ஈடு செய்யும் விடுப்பாக கருதப்படும்.
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 11 12 ஆகிய தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அளிக்கப்பட உள்ளது.
எனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:"ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை" - அமைச்சர் சிவசங்கர்