சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர், இரண்டு ஆண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் குவைத்திற்கு பணிபுரிய 'அமோசா டிராவல்ஸ்' மூலம் சென்று உள்ளனர். ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி, உணவு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும், இந்திய பண மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாட்டு வேலை மோகத்தில் சென்று உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் தொடர்ந்து வேலை செய்து வந்த நிலையில், தங்குமிடம் உணவு வழங்கப்படாமல் பணியினை தொடர வேண்டுமானால் விசாவை புதுப்பிக்க 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என அவர்களிடம் முகவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. சம்பளமும் பேசியவாறு வழங்காமல் மிகக் குறைந்த அளவில் வழங்கியதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் குவைத்தில் இருந்து பணியினை தொடர முடியாமல் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்கிறோம் எனக் கூறிய போது பாஸ்போர்ட்டை திருப்பி தர 60 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என குவைத்தில் பணி வழங்கிய தனியார் நிறுவனமான 'பியூச்சர் சர்வீஸ்' நிறுவனம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டிற்கு வர முடியாமல் பணியாளர்கள் தவித்து உள்ளனர். மேலும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு போதிய பணம் இல்லாமல் சிக்கித் தவித்த நிலையில் இந்திய தூதரகத்தை அணுகி உள்ளனர். இதையடுத்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் முயற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 19 நபர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.