சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ரஷ்யா அதிபர் புதின் உத்தரவின் பேரில் 24.02.2022 அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வந்த சூழ்நிலையில் இந்தப் போரானது அவர்களை மீட்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில உக்ரைனுக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ் மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள 24.02.2022 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை
மாநில அளவில் 24.02.2022 அன்றே கட்டுப்பாட்டு அறை உருவாக்க அரசுச் செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையிக்கு ஆணை வழங்கப்பட்டது. சென்னையில் 24X7 மணி நேரம் இயங்கக்கூடிய அவசரக் கட்டுப்பாட்டு அறையும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும், 9940256444, 9600023645 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது. மேலும் nrtchennai@gmail.com, nrtamils@tn.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளும் அறிவிக்கப்பட்டது.
காணொலி மூலம் உரை
முதலமைச்சர் ஸ்டாலின் 26.02.2022 அன்று கட்டுப்பாட்டு அறைக்கு சென்று காணொலி அழைப்பு வாயிலாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் 3 மாணவர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடி அவர்களுக்கு தைரியத்தையும் அறிவுரைகளையும் அளித்தார்.
1,921 நபர்கள் 3,501 தொலைபேசி அழைப்புகள் மூலமும், 4,426 மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு உக்ரைன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அவர்களின் பெற்றோர்களிடம் விவரம் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க ஒன்றிய வெளியுறவு துறையிடம் பகிரப்பட்டது.
முதலமைச்சர் மீண்டும் கடிதம்
உக்ரைனில் இருந்து தமிழ் மாணவர்களின் மீட்பு நடவடிக்கை தாமதமான காரணத்தினால் மீண்டும் முதலமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 28.02.2022 அன்று தொலைபேசி வாயிலாகவும், பின்னர் 03.03.2022 அன்று கடிதம் மூலமாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.