சென்னை:மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் தீபாவளி பண்டிகையை (Diwali Festival 2023) முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னை தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள்,போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளனர்.
இதனால் சென்னையில் சட்டம், ஒழுங்கு. குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்:தி.நகர்,வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உட்பட சென்னையில் பலபகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர் 7, வண்ணாரப்பேட்டை 3, கீழ்பாக்கம் 3 மற்றும் பூக்கடை 4 என 4 இடங்களிலும் மொத்தம் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு 21 பைனாகுலர் மூலமும் கண்காணித்து குற்றச் செயல்கள் நடக்காமல் கண்காணித்து வருகின்றனர்.
குற்றவாளிகள் நடமாட்டம் தீவிர கண்காணிப்பு: தி.நகர், வண்ணாப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகள் என மொத்தம் 5 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் மற்றும் 10 தற்காலிக உதவி மையங்கள் அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதலாக 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் நடப்பு நிகழ்வுகளை கண்காணித்து குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் பெரிய LED திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரபப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
ட்ரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு:மேலும் 19 ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் அறிவித்துக் கொண்டும் செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.