தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. முந்தைய சில மாதங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சென்னை மாநகா், அதை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. அதோடு இரவு நேர ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்வாசிகள் குறிப்பாக வடமாநிலத்தவா்கள் பரவலாக தங்களுடைய சொந்த ஊா்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா். அதேபோல் வெளியூா்வாசிகள் சென்னை நகருக்கு வரும் பயணங்களை பெருமளவு குறைத்துக்கொண்டும் ரத்து செய்தும் வருகின்றனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் உள்நாட்டு விமானங்களில் நாள் ஒன்றுக்கு சுமாா் 15 ஆயிரம் போ் வந்தனா். ஆனால் தற்போது அதுபடிப்படியாக குறைந்து நேற்று (ஏப்ரல் 13) சுமாா் 5,500 போ் மட்டுமே வந்தனா்.
அதேபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒரு நாளுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் போ் பயணித்தனா். ஆனால் அதுவும் தற்போது குறைந்து நேற்று (ஏப்ரல் 13) சுமாா் 6,500 போ் மட்டுமே பயணித்தனா்.
சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் நேற்று (ஏப்ரல்.13) பல விமானங்கள் போதிய பயணிகள் இன்றி காலியாகவே இயக்கப்பட்டன. பெங்களூரிலிருந்து வந்த இரண்டு விமானங்களில் ஒன்பது பயணிகளும், ராய்ப்பூரிலிருந்து வந்த விமானத்தில் மூன்று பயணிகளும், மங்களூா், கோயம்புத்தூர் விமானங்களில் தலா ஐந்து பயணிகளும், கோழிக்கோட்டிலிருந்து வந்த விமானத்தில் ஏழு பயணிகளும், ஹைதராபாத்திலிருந்து வந்த விமானத்தில் எட்டு பயணிகளும், மைசூரிலிருந்து வந்த விமானத்தில் ஒன்பது பயணிகளும் மட்டுமே பயணித்தனா்.
அதேபோல் போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய மூன்று விமானங்கள், ஹைதராபாத் செல்ல வேண்டிய மூன்று விமானங்கள், பெங்களூா் ஒன்று, மதுரை ஒன்று, பாட்னா ஒன்று ஆகிய ஒன்பது விமானங்களும், அதேபோல் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய இந்த ஒன்பது விமானங்களும் என மொத்தம் 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று (ஏப்.13) ரத்து செய்யப்பட்டன.
இதே நிலைநீடித்தால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மேலும் பல விமானங்கள் ரத்தாகும் என விமான நிலைய வட்டராங்கள் தெரிவிக்கின்றன.