சென்னை:தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று (டிச.16) காலை 7 மணி முதல் 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு சில எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மையம் வெளியிட்ட X வலைத்தளப் பதிவில், “இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் சாலைகள் வழுக்குத் தன்மையுடன் இருக்கக்கூடும். மேலும், வாகன நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. பழுதான கட்டிடங்கள் சேதம் ஆவதற்கான வாய்ப்புகளும் உள்ளது” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று (டிச.16) இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை டிசம்பர் 17: இதைத் தொடர்ந்து, நாளை (டிச.17) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்திருந்தது.
தென்தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்: இதன் காரணமாக தென்தமிழக பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (16, 17) மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தென் தமிழகத்திற்கு டிச.16, 17ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்!