சென்னை:தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, 3 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரும் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும் சுற்றி வளைத்ததாகத் தெரிகிறது.
பின்னர் தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்துள்ளனர். அதோடு மீனவர்களின் படகுகள், அவர்களின் மீன்பிடி வலைகள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின்பு தமிழக மீனவர்கள் 17 பேரையும் இலங்கைக்கு கொண்டு சென்று, ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரின் குடும்பத்தினர் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி அனுப்பினார்.
அதோடு சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் மீனவர்கள் விடுவிப்பு சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக மீனவர்கள் 17 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.