சென்னை: தமிழ்நாடு - கேரள எல்லையான கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் கடந்தாண்டு கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டதாக 3 லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர். இதேபோன்று தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியில் உள்ள தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கேரளாவில் இருந்து வாகனங்களில் எடுத்து வரப்படும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன.
தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள்: 17 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - கேரளா
கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 17 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினரான நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினரான சத்தியகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த திருநெல்வேலி, தென்காசி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களும் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:அயன் பட பாணியில் வயிற்றில் வைத்து ரூ.6.31 கோடி ஹெராயின் கடத்தல் - பெண் கைது