சென்னை: 16ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டதொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்வது தொடர்பான சட்ட மசோதாக்கள் நேற்று (ஜூன் 23) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்படுகிறது.
இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தப்படாத மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்ட மசோதாக்கள் மற்றும் வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும் நிதிப்பற்றாக்குறையை 3% விழுக்காடாக குறைப்பதற்கும்; கடன் வரம்பை பெறுவதற்கான காலவரம்பை 2024 மார்ச் வரை நீட்டிப்பதற்கான சட்ட மசோதாக்கள் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது.
ஆளுநருக்கு நன்றி. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. கொளத்தூர் தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நீதிக்கட்சியின் நீட்சி திமுக
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் தற்பொழுதுள்ள திமுக ஆட்சி.
கடந்த இரண்டு நாட்களாக அவையில் நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்ட கருத்துகளை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்வேன்.
மேலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.
ஆளுநர் உரை ட்ரெய்லர் தான்
ஆளுநர் உரை ட்ரெய்லர் போன்றது. கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஆட்சி அமைத்து இன்றுடன் 49 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 2 கோடியே 11 லட்சம் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.