சென்னை:நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் மார்ச் 12ம் தேதி நடுக்கலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 16 பேரையும் கைது செய்து, அவர்களின் 2 படகுகள் மீன்பிடி வலைகள் போன்றவர்களையும் பறிமுதல் செய்தனர்.
அதன் பின்பு மீனவர்கள் 16 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்களின் குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதினார்.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் முதலில் 12 நாகை மீனவர்களையும் அடுத்த சில தினங்களில் 4 புதுக்கோட்டை மீனவர்களையும் விடுதலை செய்து அவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.