சென்னை: தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் கலந்துகொள்ள வரும் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.