சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி(Christmas), நள்ளிரவில் இளைஞர்கள் பைக்குகளில் அதிவேகமாகவும் சாகசம் புரிந்தும் பைக் ரேஸில் ஈடுபடுவதைத் தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சில இளைஞர்கள் பைக் ரேஸ் சாகசங்களில் நள்ளிரவில் ஈடுபட்டதாக தெரியவந்த நிலையில், பைக் ரேஸ் நடக்கும் இடங்களிலும் சிசிடிவிகளின் அடிப்படையில் சில இளைஞர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அத்தோடு பைக் சாகசங்களில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். அந்த வகையில், நேப்பியர் பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருவரை அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு போலீசார் நேற்று கைது செய்தனர். பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
இதில் ஆகாஷ், டேவிட் ஆகிய இருவர் நேற்று இரவு பாண்டிபஜார் போக்குவரத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தனுஷ், மனோஜ், சந்தோஷ், விஜய், முகமது செரீப் ஆகிய 5 பேரை கைது செய்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.