ISBACON: சென்னை அடுத்த பழவந்தாங்கலில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற இஸ்பாகான் அமைப்பின் 14ஆவது மாநாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மேலும் தமிழ்நாடு தொழில் காப்பகங்கள் மேம்பாட்டுக்கான செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இஸ்பாகான் 2022ஆம் ஆண்டு விழா தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த எண்ணத்தோடு இந்த மாநாட்டை நீங்கள் நடத்தி கொண்டு இருக்கிறீர்களோ அந்த எண்ணம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
செயல் திட்டம்
இந்த மாநாட்டில் தமிழ் நாட்டிற்கான செயல் திட்டங்கள் உள்ளிட்ட மூன்று பரிந்துரை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும், பண்பாட்டிலும் மேன்மை அடைந்த ஒரு மாநிலம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அறிவு சக்தி நிரம்பிய ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். அத்தகைய அறிவு சக்தியை உருவாக்க கூடிய அறிவுசார் கல்வி நிறுவனங்களும் இங்கு தான் அதிகம் உள்ளன.
100 கல்வி நிறுவனம்
இந்தியாவில் இருக்கும் முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. மிக விரைவில் தமிழ்நாட்டினை உலகின் முன்னணி புத்தொழில் தளமாக மாற்றும் பணிகளை முடுக்கி விடும் நோக்கில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
வரும் நாள்களில் தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்களின் பணத்தோட்டமாக உருவெடுக்கும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.
சாஸ் புரட்சி
நமக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மென்பொருள் உருவாக்கித் தந்த காலம் முடிந்துவிட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மிடம் இருக்கும் பொருள்களை வாங்க கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இதை சாஸ் புரட்சி என்கிறார்கள், இது தான் திமுகவின் புரட்சி.
தமிழ்நாட்டில் 2030க்குள் மொத்த உற்பத்தி மதிப்பை ஒரு டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று நான் உறுதி ஏற்றிருக்கிறேன். இது சாத்தியமாக வேண்டுமென்றால் ஆயிரக்கான தொழில் நிறுவனங்கள் உருவாக வேண்டும். அவை உள்ளூர் சந்தையிலும் உலக சந்தையிலும் வெற்றிபெறவேண்டும். பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். இதுதான் நாம் காண வேண்டிய வளர்ச்சி.
புதிய தொழில்கள் உருவாக்கம் செய்ய இந்த அரசு நிச்சயம் துணை நிற்கும். இந்த நல்ல வேளையில் இஸ்பாகான் 14ஆம் ஆண்டு மாநாட்டினை முறைப்படி தொடங்கி வைக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க:மண்பாண்டங்களை மறந்த மண்ணின் மைந்தர்கள்: மாறிவரும் பண்பாடு?