சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலை வீரப்பன் தெருவில் சங்கம் கிராஃப்ட் என்ற தங்க நகைக்கடை இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக கடையின் உரிமையாளர் ராஜ் குமார், சுபாஷ் போத்ரா ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர்.
இவர்கள் தங்க நகைகளை டிசைன் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வார நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தங்க நகைகளை வாடிக்கையாளர்களுக்குக் காட்டி, அவற்றை மீண்டும் லாக்கரில் வைப்பது வழக்கம்.
அதேபோல கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.21) வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காட்டிவிட்டு 14 கிலோ எடையுள்ள தங்க நகைகளை லாக்கரில் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஆக.25) செவ்வாய்க்கிழமை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காட்டுவதற்காக லாக்கரை திறந்தபோது உள்ளே நகைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கடையின் உரிமையாளர்கள் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக யானைகவுனி ஆய்வாளர் ராஜக்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் உதவி ஆணையர் (பொறுப்பு) விஜயராமலு ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கடை, லாக்கரின் கதவுகள் எதுவும் உடைக்கப்படவில்லை. எனவே, போலியான சாவியைப் பயன்படுத்தி லாக்கரைத் திறந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், நகைக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் திருடினார்களா? என்ற சந்தேகத்தின்பேரிலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைப்பட்டறையும் அருகில் இருப்பதால் ஊழியர்கள் திருடியிருக்கலாமா என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
லாக்கரில் இருந்த 14 கிலோ தங்க நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை - யானைகவுனியில் தங்க நகைகள் திருட்டு
சென்னை: யானைகவுனியில் உள்ள நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ தங்க நகைகள் திருடுபோன சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
gold theft
இதையும் படிங்க: அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை: பொதுமக்கள் அச்சம்