சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் ஒமைக்ரான் பிஏ 4,பிஏ 5 பரவலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியுள்ளது. நோய்த்தொற்று அதிகரித்தாலும் புதிதாக யாரும் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஜூன் 7ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலின்படி, ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 10 ஆயிரத்து 743 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் துருக்கி நாட்டிலிருந்து வந்த நான்கு பேருக்கும் சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவருக்கும் ஜார்கண்டில் இருந்து வந்த ஒருவருக்கும், தமிழ்நாட்டில் இருந்த 138 பேர் உட்பட 144 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 55 லட்சத்து 39 ஆயிரத்து 508 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 56 ஆயிரத்து 317 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.