சென்னை:கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று இரவு மோசமான வானிலை நிலவியதால் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின. இதனால் சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தி சமாளித்தனர்.
நேற்று இரவு 10:25 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10:35 மணிக்கு டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானம், இரவு 10:40 மணிக்கு டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10:55 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் ஏசியா விமானம், இரவு 11:05 மணிக்கு டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்,
இரவு 11:05 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 11:10 மணிக்கு புபனேஸ்வரிலிருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 11:15 மணிக்கு மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 11:25 மணிக்கு மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் ஏசியா பயணிகள் விமானம், இரவு 11:35 மணிக்கு சூரத்திலிருந்து பெங்களூரு சென்ற ஏர் ஏசியா பயணிகள் விமானம்,
இரவு 11:40 மணிக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெங்களூரு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 12:10 மணிக்கு டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 12:20 மணிக்கு டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 12:40 மணிக்கு ஹாங்காங்கில் இருந்து பெங்களூரு சென்ற கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம், ஆகிய 14 விமானங்கள் அடுத்தடுத்து சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின.