சென்னை:கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின்(28), என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ/NIA) போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 11 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்து உள்ளனர்.
இவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான ஆவணங்கள், முக்கிய ஆதாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை தேசிய புலனாய்வுப் பிரிவு போலீசார், பலமுறை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளனர். இந்த வழக்கில் சம்பவத்தின்போது உயிரிழந்தவருடன் சேர்த்து 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க:சிக்கினால் ரூ.500 கோடி அபராதம் - நாளை தாக்கலாகிறது டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா..! சிறப்பம்சங்கள் என்ன?
இதற்கு இடையே பல்வேறு தடயங்கள் மற்றும் ஆவணங்களை வைத்திருந்ததன் அடிப்படையில் கோவையைச் சேர்ந்த முகமது இர்தியாஸ் என்பவரை என்.ஐ.ஏ.போலீசார் கைது செய்தனர். பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட முகமது இர்தியாஸ் பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தினர்.
தற்போது கைது செய்யப்பட்ட முகமது இர்தியாஸுக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளதை, முன்னதாகவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 11 பேரிடம் விசாரணை செய்து உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாட்சியங்களை அதிகரிக்கும் வகையில் முகமது இர்தியாஸின் செல்போனை பறிமுதல் செய்து, அதில் அவர் யாரிடமெல்லாம் பேசியுள்ளார், இந்த சதி திட்டத்திற்கு இவர் எவ்வாறு மூளையாக செயல்பட்டு உள்ளார் போன்ற பல்வேறு கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அந்த சாட்சியங்களின் அடிப்படையில் தற்போது முகமது இர்தியாஸ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகமது இர்தியாஸை வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து முகமது இர்தியாஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க:ராமன் கோயிலில் முஸ்லீம்கள் வேலை பார்ப்பதா? - சர்ச்சையாகும் ஸ்ரீராம் சேனாவின் கோரிக்கை