சென்னை: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து ஒன்றிய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானங்களின் மூலமாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதுவரை 143 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஐந்தாவது நாளாக இயக்கப்பட்ட 7 சிறப்பு விமானங்களின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 132 மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர்.
அவர்களை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னைக்கு வந்த 10 பேர் கோவைக்கு, 8 பேர் திருச்சிக்கும் 6 பேர் திருவனந்தபுரத்திற்கும் விமானம் முலம் தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அயலக நலத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் பேசுகையில், “இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 393 பேர் வந்துள்ளனர். மேலும் 15 விமானங்கள் இந்தியர்களை அழைத்து வருகின்றன. அவற்றில் அதிகளவிலான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கார்கிவ் பகுதியில் இருந்து மாணவர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். சுமி பகுதியில்தான் மாணவர்கள் அதிகளவில் உள்ளனர்.
இந்திய வெளியுறவு துறையினரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். சுமியில் 68 தமிழ்நாட்டு மாணவர்கள் உள்ளனர். கார்கிவ் நகரில் இருந்து முழுமையான மாணவர்கள் வந்து சேரவில்லை” என்றார்.