சென்னை:வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 13 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விடுதி தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சி சுகாதாரத் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையாளர் கூறும்போது, ”வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 13 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கல்லூரி விடுதி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13 மாணவர்கள் வேப்பேரியில் உள்ள சித்தா கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 800 பேர் விடுதியில் தங்கி படிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் 570 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதனிடையே, நாட்டில் கோவிட் பாதிப்பு அக்டோபர், நவம்பரில் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், 62% க்கும் அதிகமான மக்கள் ஓரளவு தடுப்பூசி போட்டால், நிலைமை முதல் மற்றும் இரண்டாவது அலையிலிருந்து வேறுபடும்.
இதனிடையே அடுத்துவரும் மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. ஏனென்றால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்றாம் அலை வலுபெறக்கூடும் என்று நிதி ஆயோக் சுகாதாரம் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.