சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக நாளை வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதியுடன் நடைபெற்று முடிகிறது.
இந்தத் தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 3185 மையங்களில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7728 மாணவிகள் என 14 ஆயிரத்து 710 பேர் 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனித் தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 மாணவர்கள் எழுத 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர் பணியில் உள்ளனர். மேலும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.