சென்னை:தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழித்தாள் (தமிழ் பாடம்) தேர்விற்கு பதிவு செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களில் மொத்தம் 50,674 பேர் தேர்வு எழுத வருகை தரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் படித்த மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வு எழுத வராமல் இருந்தபோது, அவர்களை கண்டறிந்து ஆசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு தேர்வு எழுத வைக்கப்பட்டது.
ஆனால், நடப்பாண்டிலும் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களில் சுமார் 5 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத வராமல் உள்ளனர். எனவே இன்று (மார்ச் 13) பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கக் கூடிய துணைத் தேர்வை எழுத நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்கள் இன்று தேர்வுக்கு மட்டும் வராமல் இருந்தால், அவர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் கண்டறிந்து, வரக்கூடிய நாட்களில் இதர பாடங்களுக்கான பொதுத் தேர்வை எழுத வைக்கவும், நீண்ட நாட்கள் வராமல் உள்ள மாணவர்களையும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தின் மூலம் மாணவர்களின் வருகை பதிவேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களை தொடர்பு கொண்டு தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையிலும் தேர்வு எழுத வராத மாணவர்களின் நிலைமை குறித்து தலைமை ஆசிரியர்கள் மூலம் கண்டறிந்து தேர்வு எழுத வைக்கவும், அவர்களை உயர் கல்வி பயில வைக்கவும் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.