இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாணவர்களின் பாதுகாப்பு கருதி சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகவே முடியும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கட்டமமைப்பின்படி, மேல்நிலைப்பள்ளித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான் கல்லூரிச் சேர்க்கை நடைப்பெறுகிறது. நுழைவுத் தேர்வுகளும், வெளிநாடுகளில் கல்வி பயில விண்ணப்பிப்பதற்கும் வேலைவாய்ப்புக்குத் தகுதி பெறுவதற்கும் +2 மதிப்பெண் அவசியமாகிறது.
பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால் திட்டமிடுதலுடன் சற்று காலதாமதம் ஆனாலும் பொதுத் தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும். கரோனா இரண்டாம் அலை தணிந்ததும் மூன்றாம் அலை ஏற்படுவதற்கு முன்னதாக அனைத்து முன்னேற்பாடுகளுடன் பாதுகப்பான சூழலில் தேர்வு நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே சரியானது.
நோய்த்தொற்றின் வேகம் குறைந்ததும் தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டு, மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் வழங்கலாம். அதற்கு முன் நடப்புக்கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டனவா என்பதை உறுதி செய்து கொள்வது மிக அவசியம்.