கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும், வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் டிஜிபி காவல் துறையினருக்கு உத்தரவிட்டதால், வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்ட காவலர்கள் பொதுமக்களை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கவில்லை.
இந்நிலையில், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வாகனங்களிலும் தெருக்களிலும் சுற்றித் திரிந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு காவல் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியது. அதில், முழு ஊரடங்கை கெடுபிடியாக்க முடிவு செய்தனர். அதனடிப்படையில் நேற்று பல்வேறு இடங்களில் தீவிரமாக வாகனத் தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.