தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவில் தேசத் துரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா - நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? - 124 a sedition law still have relevance

சென்னை: இந்தியாவில் தேசத் துரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா? வல்லுநர்களின் பதில்கள் என்ன? என்பது குறித்து விளக்கமாக இந்த சிறப்புத் தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் தேச துரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா?
இந்தியாவில் தேச துரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா?

By

Published : Jun 10, 2021, 12:12 PM IST

இந்திய தண்டனைச் சட்டம் 124A:ஆங்கிலேய அரசுக்கு எதிராக பொதுமக்கள் கருத்து தெரிவித்தால், அவர்களைக் கைது செய்யவும் கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்பட்டது, இந்திய தண்டனைச் சட்டம் 124A (தேசத் துரோகச் சட்டம்). இந்த சட்டம் யார் மீது போடப்படுகிறதோ? அவர்களுக்கு குறைந்த பட்சமாக 3 மாத சிறைத் தண்டனையும் அதிக பட்சமாக ஆயுள் வரையும் சிறையில் அடைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு

மக்களின் குரல் வளைகளை நசுக்குகிறது என இந்தச் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவியது. ஆங்கிலேய சட்ட புத்தகத்தின் பிரதிபலிப்பான இந்திய தண்டனைச் சட்டப் புத்தகத்தில் குடியரசுக்குப் பின்னும் ஓர் அங்கமாகவே இச்சட்டம் உள்ளது.

சொந்த மக்கள் மீதே தேசத் துரோக வழக்கு

இந்திய சுதந்திரத்திற்குப் பின் ஆட்சியில் அமரும் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தால், சொந்த மக்கள் மீதே இந்தச் சட்டம் பாய்கிறது. கடந்த 75 ஆண்டு கால காங்கிரஸ், பாஜக ஆட்சி காலத்தில் தங்களின் பாதுகாப்பு கேடயமாகவே தேசத் துரோக வழக்குகள் கையாளப்பட்டன.

கடந்த 1962 ஆம் ஆண்டு தீர்ப்பு

இந்நிலையில், பத்திரிகையாளர் வினோத் துபே மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 1962ஆம் ஆண்டு தீர்ப்பு (Kedarnath singh vs State of Bihar) வழங்கியது. அதன் அடிப்படையில் கருத்து சொல்வது தேசத் துரோகமாக கருத முடியாது என உத்தரவிட்டது.

கடந்த 2011 - 2020 ஆகிய ஆண்டுகள் வரை மாநிலங்களில் பதிவான தேசத் துரோக வழக்குகள்:

  • பிகார் 168
  • தமிழ்நாடு 139
  • உத்தரப் பிரதேசம் 115
  • ஜார்க்கண்ட் 62
  • கர்நாடகா 50

இவ்வாறு 5 மாநிலங்களில் 534 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாஜக, காங்கிரஸ் ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள்

பாஜக ஆட்சி காலத்தில் 2014 - 2020ஆகிய ஆண்டுகள் வரை 7,136; காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2010 - 2014 ஆகிய ஆண்டுகள் வரை 3,762 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் வழக்குகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருப்பது குறித்து சட்ட வல்லுநர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் கருத்து

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறுகையில், "ஆங்கிலேயர் காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி உள்ளிட்டத் தலைவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய்ந்தது. இந்திய விடுதலைக்கு பின்னும் தேசத் துரோக சட்டம் நீக்கப்படாமல் உள்ளது.

இந்திய அரசியலமைப்பு 21 பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் படி, ஆட்சிப் பொறுப்பில் உள்ள குடியரசுத் தலைவர், பிரதமர், அரசு அலுவலர்களுக்கு எதிராக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க எந்தத் தடையும் இல்லை. ஆட்சியின் குறைகளை, விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாததால் ஆட்சியாளர்கள் அடக்குமுறை சட்டமான தேசத் துரோக வழக்கை கையில் எடுக்கின்றனர்.

ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்து விமர்சனங்களை தெரிவிக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் தடை விதிக்க மத்திய அரசு முயற்சிப்பது சரியல்ல. கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்க ஆளும் கட்சியினரே புகார் அளித்து தேசத் துரோக வழக்கை பதிந்து நடவடிக்கை எடுக்கின்றனர். இது அவசரநிலையை மீண்டும் புகுத்துவதாகவே உணரமுடிகிறது" என்றார்.

இந்தியாவில் தேச துரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா?

மூத்த வழக்கறிஞர் கருத்து

மேலும் மூத்த வழக்கறிஞர் இளங்கோ கூறுகையில், "அரசின் குற்றங்களை சொல்பவர்களின் மீது தேசத் துரோக வழக்கு போடப்படுவது சட்டப்படி குற்றம்.

இதேநிலை நீடித்தால், கருத்துச் சுதந்திரம் இல்லாமல் சிலர் ஆயுத கலாசாரத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் என்பது அரசின் நடவடிக்கைகளை அரசுக்கு உணர்த்துவதாக இருக்க வேண்டும். மக்களைத் தவறான வழிக்கு தூண்டுவதாக கருத்து இருந்தால், அரசின் தேசத் துரோக வழக்கு தொடர்வதைத் தவிர்க்க முடியாது" என்றார்.

சம்மட்டி அடியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

அரசாங்கம் ஒவ்வொரு முறையும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தேசத் துரோகம் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கும் போதெல்லாம், சம்மட்டி அடியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசைக் கட்டுப்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விட வேண்டாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: அரசு நியாயவிலைக் கடையில் காலாவதியான கோதுமை மாவு விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details