சென்னை:துவரம் பருப்பு டெண்டரில் 120 கோடி ஊழலில் ஈடுபட முயன்ற கிறிஸ்டி நிறுவனத்தின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்திற்காகக் கொள்முதல் செய்யப்படும் பொருள்களில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடப்பதாகவும், இதில் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கும் தொடர்பிருப்பதாகவும் அறப்போர் இயக்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
மேலும் இந்த ஊழலில் கிறிஸ்டி என்ற நிறுவனம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டுவந்தது.
இதனைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்றதும் தற்போது நடைமுறையில் உள்ள பழைய டெண்டர் முறையை மாற்ற வேண்டும், அனைத்து நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்க ஒப்புதல் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அறப்போர் இயக்கம் வலியுறுத்திவந்தது.
ரத்துசெய்யப்பட்ட முந்தைய டெண்டரில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. மூன்றில் ராசி நிறுவனம் கிறிஸ்டி நிறுவனத்திற்குச் சொந்தமானது. மற்ற இரண்டு நிறுவனங்களான கேந்திரியா, நக்கோஃப் கிறிஸ்டி நிறுவனத்திற்காக டெண்டர் எடுப்பவர்கள்.
மூவருமே, ரத்துசெய்யப்பட்ட பழைய டெண்டரில் கிலோவுக்கு 143.50 ரூபாய்க்கு அதிகமாக விலை கொடுத்துள்ளனர். இவர்கள் மட்டுமே பங்கேற்று விலையை அதிகமாகக் கொடுக்கும் வகையில் முறைகேடாக இந்த டெண்டர் நடத்தப்பட்டுவந்ததாக அறப்போர் இயக்கம் கூறியது.
இது குறித்து அறப்போர் இயக்கம் கூறுகையில், “புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பழைய டெண்டர்களை ரத்துசெய்துவிட்டு பல நிறுவனங்களும் பங்குபெற்று போட்டியிடும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றி புதிய டெண்டரை வெளியிட்டது.
அதன் விளைவு நான்கு கிறிஸ்டி நிறுவனங்களோடு சேர்த்து மொத்தம் ஒன்பது நிறுவனங்கள் புதிய துவரம் பருப்பு டெண்டரில் பங்கேற்றுள்ளன.