சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது படங்கள் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டாடுவார்கள். அப்படி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அஜித் நிகழ்த்திய மிரட்டலான சம்பவம் தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'மங்காத்தா'.
மங்காத்தா ஆட்டம் ஆரம்பித்தது: அப்போதைய காலத்தில் சென்னை 28, சரோஜா போன்ற ஜாலியான படங்களை எடுத்துவந்த இயக்குநர் வெங்கட் பிரபுவை அழைத்து, நாம் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்கிறார் நடிகர் அஜித். இதனையடுத்து வெங்கட் பிரபு ஐபிஎல் சூதாட்ட பணத்தை கொள்ளையடிக்கும் நண்பர்கள் பற்றி ஒரு கதையை சொல்லியுள்ளார்.
இதில் எல்லோரும் வில்லன்கள் ஒருவன் மட்டும் வில்லன்களுக்கே வில்லன் என்று வெங்கட் பிரபு சொன்னதும் அந்த வில்லாதி வில்லனாக நான் நடிக்கிறேன் என்று அஜித் சொன்ன அடுத்த நொடி மங்காத்தா ஆட்டம் ஆரம்பம்மானது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அர்ஜுன், த்ரிஷா என முன்னணி நடிகர்கள் இணைகின்றனர். படத்தை முன்னாள் அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
அஜித்தின் சர்ச்சை பேச்சு: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு "பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்னும் நிகழ்ச்சியில் கருணாநிதி முன்னிலையில் நடிகர் அஜித் பேசியது சர்ச்சையான காலகட்டம் அது. இதனால் படத்திற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்தார்.
ஆனால் படம் முடிந்து படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லை, அனவரும் ஒருவித தயக்கத்துடன் இருந்தார்கள். காரணம் 'மங்காத்தா' படத்தின் தயாரிப்பாளர் திமுக வாரிசு என்பது தான். இதனால் படம் ரெட் ஜெயன்ட், ஸ்டூடியோ கிரீன் என நிறுவனங்கள் கைமாறியது, ஆனால் எந்தவித பலனும் இல்லை. இந்த செய்தி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காதுக்கு செல்ல, "எந்தவித எதிர்ப்பும் இல்லாத படத்துக்கு ஏன் பிரச்சினை கொடுக்கிறீர்கள்" என அவர் கேட்டதாக அப்போது தகவல் வெளியானது. ஏனென்றால் அப்போதைய முதலமைச்சரின் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர்.
விளம்பரங்களே இல்லாமல் பந்தயம் அடித்த மங்காத்தா: 2011 ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு வெளியாக வேண்டிய படம், சற்று தாமதமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. ஆனால் வெளியாகும் நாள் வரை படத்தின் வெளியீட்டு தேதி குறித்து யாருக்கும் தெரியாத நிலையில் இருந்தது.
திடீரென ரிலீஸ் அறிவிக்கப்பட்டதால், இரவோடு இரவாக புக்கிங் தொடங்கி அடுத்த நாள் படம் வெளியானது. எந்தவித விளம்பரங்களோ, போஸ்டர்களோ எதுவுமின்றி இன்றி திடீரென வெளியானது மங்காத்தா. திரையுலகின் ஒரு முன்னணி நடிகரின் படம் இப்படி எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியான படம் என்றால் அது மங்காத்தாவாகத்தான் இருக்கும்.