தமிழ்நாடு

tamil nadu

'12 முதல் 18 வயது வரை தடுப்பூசித் திட்டம் தமிழ்நாட்டில்தான் முதலில் செயல்படுத்தப்படும்'

By

Published : Oct 4, 2021, 1:48 PM IST

Updated : Oct 4, 2021, 2:04 PM IST

12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழ்நாட்டில்தான் முதலில் செயல்படுத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலித்துவருவதாகவும், அனுமதி கிடைத்தவுடன் தமிழ்நாட்டில்தான் அந்தத் திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என மா. சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மா.சுப்பிரமணியன், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இன்று (அக். 4) ஆய்வுமேற்கொண்டனர்.

டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அதன்பின் செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் டெங்கு பாதிப்பு பரவலாக உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக உள்ளதுதான்.

12 முதல் 18 வயது வரை தடுப்பூசித் திட்டம் தமிழ்நாட்டில்தான் முதலில் செயல்படுத்தப்படும்

கேரளா எல்லைகளில் நிபா வைரஸ், கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தடுப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

நீர்நிலையங்களில் லார்வா நிலையிலேயே (தொடக்க நிலை) கொசுக்களை அழிப்பதற்கு கம்பூசியா வகை மீன்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. சென்னையில் மட்டும் டெங்கு தடுப்புப் பணியில் மூன்றாயிரத்து 589 களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு நான்கு வகை பணிகள் வழங்கப்பட்டுள்ளன. நீர்நிலையங்களில் கொசு மருந்து தெளிப்பது, வீடுகளில் உபயோகம் இல்லாத பொருள்களில் தேங்கி இருக்கும் நீரை அகற்றுவது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, காலை, மாலை என இரு வேளையிலும் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் முதலில் செயல்படுத்தப்படும்

சென்னையில் மட்டும் ஏழாயிரத்து 757 இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இங்கு நீர் தேங்கியிருப்பது சவாலான ஒன்றாக உள்ளது. ஊரகப் பகுதிகளில் 13 ஆயிரத்து 909, நகரப் பகுதிகளில் ஒன்பதாயிரத்து 250 பேர் என மொத்தம் 23 ஆயிரத்து 162 பேர் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒன்பது மாதங்களில் 83 ஆயிரத்து 409 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இரண்டாயிரத்து 930 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது. இரண்டு பேர் உயிரிழந்தனர், 337 பேர் தற்போது மருத்துவம் பெற்றுவருகின்றனர்.

12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலித்துவருகிறது, அனுமதி கிடைத்தவுடன் தமிழ்நாட்டில்தான் அந்தத் திட்டம் முதலில் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்

Last Updated : Oct 4, 2021, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details