சென்னை:மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை வெளியிடுகிறார். பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை
1.www.tnresults.nic.in
2.www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
4. www.dge.tn.gov.in
ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மதிப்பெண் சான்றிதழ்
பள்ளி மாணவர்கள் ஜூலை 22ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடத்துவதற்கு தேர்வுத்துறை தயாரானது. ஆனால், கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என ஜூன் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டு குழுவையும் நியமித்தார். மதிப்பெண் வழங்கும் முறை குறித்த அறிக்கையை ஜூன் 25ஆம் தேதி முதலமைச்சரிடம் அக்குழு வழங்கியது. அதனை ஆய்வு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூலை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்குரிய முறைகளை வெளியிட்டார்
தசம எண்களில் மதிப்பெண்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரி மதிப்பெண்ணில் 50 விழுக்காடு, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து தேர்வில் இருந்து மட்டும் 20 விழுக்காடு மதிப்பெண், 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு, அக மதிப்பீட்டில் இருந்து 30 விழுக்காடு மதிப்பெண் கணக்கிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்து இருந்தாலோ அந்த மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
அதன் அடிப்படையிலும், அரசு வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அந்தப் படத்திற்கான மதிப்பெண்களில் கூட்டுத்தொகை தசம எண்களில் வந்தால் அப்படியே போடப்படுகிறது.
இதற்கு முன்னர் மாணவர் ஒரு பாடத்தில் பெறும் மதிப்பெண்கள் 88.5 என இருந்தால் 89 என முழு மதிப்பெண் வழங்குவார்கள். ஆனால் தற்போது உயர் கல்வியில் மாணவர்கள் சேருவதற்கு கட்-ஆப் மதிப்பெண்ணை கருத்தில் கொண்டு அவர்களின் மதிப்பெண்கள் கூட்டுத்தொகை 87.75 என வந்தால் அப்படியே தசம என்னுடன் வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க:8 மாநிலங்களைச் சேர்ந்த 11 கல்லூரிகளில் தாய்மொழியில் பொறியியல் கல்வி!