சென்னை:கோடம்பாக்கம் நம்பியார் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (60). மூதாட்டியான தனலட்சுமி நேற்று (ஜூலை.02) அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு கர்ணன் தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பத்திரப்படுத்துவதாகக் கூறி நகை திருட்டு
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், வழியில் ஒரே சண்டையாக உள்ளதால் நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லுமாறு தனலட்சுமியிடம் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய தனலட்சுமி தாலி, வளையல், செயின் என ஆறு சவரன் நகைகளை கழட்டியுள்ளார். பின்னர் நகைகளை வைக்க பை இல்லாததால், கைக்குட்டையில் சுருட்டித் தருவதாக இருவரும் கூறியுள்ளனர். அதன்படி தனலட்சுமி நகைகளை கழற்றிக் கொடுக்க, அதனை இருவரும் கைக்குட்டையில் மறைத்து கொடுத்துள்ளனர்.
பின்னர் மூதாட்டி வீட்டிற்கு சென்று கைக்குட்டையை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் கற்கள் இருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.