சென்னை: சென்னையில் உள்ள தொழிற்சாலை, மற்றும் தனியார் நிறுவனங்களில் சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்தியுள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த சோதனையானது வாரம்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்களை, பணியமர்த்தியுள்ளதாக குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் பிரிவு கூடுதல் செயலாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனை அடுத்து, சென்னை மாவட்ட குழந்தைகள் நல தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ரெட்டி ராமன் தெருவில் உள்ள நகைப் பட்டறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் நகைப்பட்டறையில் பணியாற்றி வந்த 7 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 12 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டனர்.
மேலும் நகைப்பட்டறை உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 7000 முதல் 10ஆயிரம் வரை, அவருடைய பெற்றோர்களுக்கு முன்பணம் கொடுத்து சிறுவர்களை சென்னை அழைத்து வந்து 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை குழந்தைகளை வேளை வாங்கி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.