சென்னை:மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் இஸ்லாமிய மதரஸா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை பிகாரை சேர்ந்த அக்தர் நிர்வகித்து வருகிறார். இங்கு பிகார் மாநிலத்தை சேர்ந்த 5-வயது முதல் 12-வயது வரை குழந்தைகள் பலர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்துவரும் குழந்தைகளை, பள்ளி நிர்வாகிகள் சிலர் அடித்து துன்புறுத்துவதாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் மாதவரம் காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று (நவ.29) பள்ளியை சோதனை செய்த காவல்துறையினர், அங்கு அடைக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பிகாரில் அரபி வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தினால், பிகார் மாநில குழந்தைகள் இந்த மதராஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவதாகவும், சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் கேபிள் வயர்களால் அடித்துத் துன்புறுத்துவதும் தெரியவந்துள்ளது.
இதில் சில குழந்தைகளின் உடலில் ரத்தக்காய தழும்புகள் இருப்பதால், அவர்களை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட உள்ளதாகவும், குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரியிடம் புகார் பெற்று பள்ளி நிர்வாகியான அக்தரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "சிறுமிகள் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய காப்பக உரிமையாளர்" - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!