தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் தேர்வு எழுதுகின்றனர். பறக்கும்படையில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

che
che

By

Published : Mar 13, 2023, 7:17 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை(மார்ச்.14) தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளிகளிலிருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் எழுத உள்ளனர்.

இதில், தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் எழுதுகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டில் 3,224 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 799 மாணவர்கள், 7,577 மாணவிகள் என 14 ஆயிரத்து 376 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களாக 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 மாணவிகளும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 ஆயிரத்து 338 பேர் 135 மையங்களில் எழுத உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளில் 3,228 மாணவர்கள், 2,607 மாணவிகள் என 5,835 பேர் தேர்வு எழுத உள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் ஆகய 8 சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.

இந்த நிலையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், "பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்த கூடாது. செல்போன்களை அணைத்து, தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அதனையும் மீறி தேர்வு அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் கட்டாயமாக சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுப்பட்டால் வழங்கப்படகூடிய தண்டனை விபரங்கள் அச்சிடப்பட்டு பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு மையமாக செயல்படகூடிய பள்ளிகளில் காலையில் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ் தேர்வு எப்படி.? 12ஆம் வகுப்பு மாணவிகள் கருத்து

ABOUT THE AUTHOR

...view details